JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும், முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என அறியப்பட்ட, ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, 2025 செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் உறுதியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு செய்துள்ளது. பிரதான வியாபார அளவுகோல்களில் உறுதியான வளர்ச்சியை எய்தியுள்ளதுடன், அதன் நீண்ட கால மூலோபாய முன்னுரிமைகளை நிறைவேற்றுவதில் தொடர்ச்சியான முன்னேற்றத்தையும் எய்தியுள்ளது.
2026 நிதியாண்டின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் நிறுவனம் ரூ. 241 மில்லியனை வரிக்கு முந்திய இலாபமாகப் பதிவு செய்திருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 22% உயர்வாக அமைந்திருப்பதுடன், ஒழுங்கமைக்கப்பட்ட முதலீட்டுத் தொகுப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட செயற்பாட்டு வினைத்திறன் ஆகியன இதில் ஆதரவளித்திருந்தன. நீண்ட கால அடிப்படையில் வளர்ச்சியை எதிர்பார்த்து தொடர்ச்சியாக முதலீடுகளை மேற்கொண்டு வரும் நிறுவனம், 2025 செப்டெம்பர் 30 ஆம் திகதியன்று தேறிய வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 141 மில்லியனைப் பதிவு செய்திருந்தது.
வருடாந்த அடிப்படையில் தேறிய தொழிற்பாட்டு வருமானம் 34% இனால் உயர்ந்து ரூ. 1.43 பில்லியனாகப் பதிவாகியிருந்தது. இவ்வுயர்வானது நிறுவனத்தின் பிரதான வருமானமீட்டல் மற்றும் செம்மையான ஐந்தொகை முகாமைத்துவத்தில் கவனம் செலுத்தியிருந்தமையை பிரதிபலிக்கும் வகையில் இந்த உயர்வு அமைந்திருந்ததுடன், கடன்கள் மற்றும் வருமதிகள் தொகுப்பு வருடாந்த அடிப்படையில் 49% இனால் உயர்ந்து ரூ. 26.7 பில்லியனாகப் பதிவாகியிருந்தது. இதில், பிரதான வாடிக்கையாளர் பிரிவுகளில் புதுப்பிக்கப்பட்ட கடன் வழங்கல் செயற்பாடுகள் பங்களிப்புச் செய்திருந்தன. அதேவேளை, வைப்புகள் ரூ. 16.9 பில்லியனாக உயர்ந்து, 17% அதிகரிப்பை பிரதிபலித்திருந்தது. வர்த்தக நாமத்தின் நம்பிக்கையை வென்ற நிதிவழிகாட்டல்களில் வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் கொண்டுள்ள தொடர்ச்சியான உறுதிப்பாடு இதனூடாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது.
நிதிப் பெறுபேறுகள் தொடர்பாக ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் தவிசாளர் ராஜேந்திர தியாகராஜா கருத்துத் தெரிவிக்கையில், “எமது மூலோபாயத்தின் தொடர்ச்சியான வலிமை மற்றும் வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் மத்தியில் நாம் பெற்றுள்ள நம்பிக்கை ஆகியவற்றை இந்தப் பெறுபேறுகள் பிரதிபலித்துள்ளன. வேகமாக வியாபித்து வரும் நிதிச்சூழலில் நிலைபேறான, அளவிடக்கூடிய மற்றும் பொருத்தமான வியாபார மாதிரியைக் கட்டியெழுப்புவதில் நாம் தொடர்ந்தும் கவனம் செலுத்துகிறோம். எமது மூலோபாய முன்னுரிமைகளினூடாக அளவிடக்கூடிய முன்னேற்றம் எய்தப்பட்டுள்ளதை எமது பிரதான பிரிவுகளில் பதிவாகியுள்ள வளர்ச்சியின் மூலம் அவதானிக்க முடிவதுடன், நிதித்துறையில் ஜனசக்தி பைனான்ஸ் நிறுவனத்தை முன்னணி செயற்பாட்டாளராக நிலைநிறுத்தியுள்ளது.” என்றார்.
இந்த நிதிப் பெறுபேறுகள் தொடர்பாக, ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி சிதம்பரம் ஸ்ரீ கஜேந்திரன் கருத்துத் தெரிவிக்கையில், “2025/2026 முதல் அரையாண்டு பெறுபேறுகளினூடாக, எமது ஒழுங்கமைக்கப்பட்ட நிறைவேற்றங்கள் மற்றும் சகல பங்காளர்களுக்கும் பெறுமதியை ஏற்படுத்துவதற்கான எமது அர்ப்பணிப்பு ஆகியன வெளிப்படுத்தப்பட்டுள்ளன. எமது வாடிக்கையாளர் உறவுகளைக் கட்டியெழுப்புவது, செயற்பாட்டு செயன்முறைகளை சீராக்குவது மற்றும் எமது கடன் வழங்கல் பிரிவை விரிவாக்கம் செய்வது ஆகியவற்றில் நாம் சிறந்த முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளோம். எமது டிஜிட்டல் ஆற்றல்களை வலிமைப்படுத்துவதில் நாம் தொடர்ச்சியாக கவனம் செலுத்துவதுடன், நிலைபேறான வளர்ச்சியை எய்துவதற்காக வாடிக்கையாளர் அனுபவங்களை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்துவோம்.” என்றார்.
2025/2026 முதல் அரையாண்டு காலப்பகுதியில் ஜனசக்தி பைனான்ஸ் நிறுவனத்தின் நிதிப் பெறுபேறுகளினூடாக, வளர்ச்சியை, முறையான இடர் முகாமைத்துவம் மற்றும் மூலோபாய தொலைநோக்கு ஆகியவற்றுடன் சமநிலைப்படுத்திக் கொள்ளக்கூடிய அதன் ஆற்றல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களை மையப்படுத்திய செயற்பாடுகள் மற்றும் செயற்பாட்டு சிறப்பு ஆகியவற்றில் நிறுவனம் தொடர்ந்தும் கவனம் செலுத்துவதுடன், ஆண்டின் இரண்டாம் அரையாண்டு காலப்பகுதியில் தொடர்ச்சியாகவும் சிறந்த நிதிப் பெறுபேறுகளை எய்துவதற்கான உறுதியான அடித்தளத்தை ஏற்படுத்தியுள்ளது.
###.
ஜனசக்தி பைனான்ஸ் பற்றி (முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டது)
ஜனசக்தி பைனான்ஸ் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய பரந்தளவு நிதிச் சேவைகளை வழங்குகிறது. அதில், வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், குத்தகை (லீசிங்), தங்கக் கடன்கள், மாற்று நிதித் தீர்வுகள், கூட்டாண்மை நிதிவசதியளிப்புகள் மற்றும் பல சேவைகள் அடங்கியுள்ளன. நிறுவனம் 44 வருட கால உறுதித் தன்மை, வலிமை, நம்பிக்கை மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை நிதித்துறையில் கொண்டுள்ளது. வாடிக்கையாளரை நோக்காகக் கொண்ட நிதிச் சேவைகள் வழங்குனராக ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி தன்னை நிலைநிறுத்தியுள்ளதுடன், புத்தாக்கத்துக்கு முக்கியத்துவமளித்து, சிறந்த தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது. ஜனசக்தி பைனான்ஸ் ஒரு JXG (ஜனசக்தி குழும கம்பனி) என்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்ற நிறுவனமாகும். LRA இடமிருந்து BB+ (Positive Outlook) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது.

பட விளக்கம்: (இடமிருந்து வலமாக) ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் தவிசாளர் ராஜேந்திர தியாகராஜா மற்றும் ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி சிதம்பரம் ஸ்ரீ கஜேந்திரன்.
